வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு ‘புரத ஆராய்ச்சி’க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று (அக்.9) ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. புரதம் சார்ந்த ஆராய்ச்சிக்காக இம்மூவருக்கும் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது. மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க உயிரியியலாளர்கள் இவர்கள் இருவரும் மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் படியெடுத்தலுக்கு (transcription) பின்பு மரபணு வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தற்காக கூட்டாக உயரிய இந்த விருதினை பெறுகின்றனர். நோபல் கமிட்டி, “இவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான அடிப்படை முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன” என்று தெரிவித்துள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று (அக். 8) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃரி இ ஹிண்டன் ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
செயற்கை நரம்பியல் இணைப்புகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக (for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks) பேராசிரியர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் பேராசிரியர் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசும், அக்.14-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.