“விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்புகளை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

16 0

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.07) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “சென்னை விமான சாகச நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இறந்தவர்கள் ஐவருமே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். 15 லட்சம் மக்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் விமான சாகச நிகழ்ச்சி தெரியுமோ அங்கிருந்தெல்லாம் கூட மக்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கே வராத சிலர்தான் பூதக்கண்ணாடியை வைத்து குற்றம் கண்டுபிடிக்கின்றனர். எனவே இதை அரசியலாக்க வேண்டாம்.

இது முழுக்க முழுக்க இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி. அதனால்தான் அவர்களையும் நாம் குறைசொல்லிவிட முடியாது. வெயில் இருக்கும் என்று தெரிந்துதான் தொப்பி, கண்ணாடி அணிந்து வாருங்கள் என்று அவர்களும் முன்பே கூறியிருந்தார்கள். இந்தியாவின் விமானப்படை கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது. இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் வெயில் தாக்கமும், நீர்ச்சத்து குறைபாடும்தான். மருத்துவ வசதி இல்லையென்று சொல்லமுடியாது. காரணம் மெரினாவுக்கு அருகே தான் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என அனைத்தும் உள்ளது. இப்படி ஒரு கட்டமைப்பு உலகத்திலேயே எங்கும் கிடையாது” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.