பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் ; இரு சீனர்கள் பலி

13 0

பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சில கார்களும் தீ பிடித்து எரிந்தன. விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளன.

இது ஒரு  “பயங்கரவாதத் தாக்குதல்”. சிந்து மாகாணத்தில் மின் திட்டத்தில் பணிபுரியும் சீன பொறியாளர்களை குறிவைத்து இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன் இது வெளிநாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதல் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.