உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; உயர் நீதிமன்றில் முன்னிலையானார் நிலந்த ஜயவர்தன

12 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று திங்கட்கிழமை (07) உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியதால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல்  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நிலந்த ஜயவர்தன நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால்,  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்காக நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.