தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !

18 0

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது.

பின்னர் இருநாட்கள் அவகாசத்துடன் அக்கட்டமைப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைவது பற்றி ஆராய்ந்தது. தொடர்ந்து புலம்பெயர் தரப்பின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து துறைசார்ந்த நபர்களின் கூட்டு ஒன்றுடன் இணைந்து சுயேட்சையாக களமிறங்குவது பற்றி கவனம் செலுத்தியிருந்தது.

எனினும் கடந்த 29ஆம் திகதி திருகோணமலையில் கூடிய தமிழ் மக்கள் பொதுச்சபையானது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் சங்குச் சின்னத்தினைப் தனியொரு அரசியல் தரப்பு பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானம் எடுத்து அறிவித்திருந்தது.

இதற்குள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்தினை தனதாக்கிக் கொண்டது. இந்நிலையில், சங்குச் சின்னத்தினை பயன்படுத்தி அரசியல் தரப்பொன்று பயனடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு திருகோணமலை முடிவை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக இணையவழியில் அதுகுறித்து கலந்துரையாடப்பட்டது. எனினும் இரண்டு நாட்களிலும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தக் கலந்துரையாடல்களின்போது ஒரு தரப்பினர் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், தேர்தலில் போட்டியி வேண்டும் என்றும், பிறிதொரு தரப்பினர் திருகோணமலை தீர்மானமான தேர்தலில் போட்டியிடாதிருப்பதை பின்பற்ற வேண்டும் என்றும் அடுத்த தரப்பினர் அரசியல் கட்சிகளுடன் மீள் ஒப்பந்தம் செய்து அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் முன்மொழிவுகளைச் செய்துள்ளனர்.

இதன்காரணமாக, தமிழ் மக்கள் பொதுச்சபையால் உறுதியான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதுள்ளது. இதனைவிடவும் சங்குச் சின்னத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உரிமையாளராகியிமையும் பொதுச்சபைக்கு அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே அடுத்த பொதுத்தேர்தலில் எவ்விதமான முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும், அதில் தனது வகிபாகம் எதுவென்று தீர்மானம் எடுக்க முடியாது தடுமாறிவருகின்றது தமிழ் மக்கள் பொதுச்சபை.

இந்நிலையில் நேற்று இரவும் இணைய வெளியில் மீண்டும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தில் உரையாடப்பட்ட விடயங்கள் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் இறுதியாகவில்லை.