ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : வாக்குப்பதிவு விறுவிறுப்பு

28 0

இந்திய மாநிலங்களில் ஒன்றான ஹரியானா மாநிலத்திற்கு சட்டப்பேரவை பொது தேர்தல் இன்று நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி வரை 36.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கிறது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.

மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 20, 632 வாக்குச்சாவடி மையங்களை அமைத்திருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரசிற்கும் இடையே வலுவான போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுடன் மாநில தலைவர்களில் ஒருவரான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் போட்டியிடுகிறது. மொத்தம் 1031 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில் தற்போதைய முதல்வர் நயாப் சிங் ஷைனி, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வமான விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வெளியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பதிவான வாக்குகள் எதிர்வரும் எட்டாம் திகதியன்று எண்ணப்படுகிறது.

இதனிடையே ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவை பொது தேர்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது காங்கிரஸ் கட்சியிடம் இழக்குமா? என்பதை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உறுதியாக தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.