நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்தார் மிலிந்த மொரகொட

28 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட ‘இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்’ எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் ‘பாத்பைன்டர் பவுன்டேஷனின்’ ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொடவினால் நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது. 

குறுகிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதனையடுத்து கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட, ஜெய்சங்கரால் எழுதப்பட்ட ‘இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்’ எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை அவரிடம் கையளித்தார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாத்பைன்டர் பவுன்டேஷனின் தலைவர் பேர்னாட் குணதிலக்க, தொடர்பாடல் பிரிவு ஆலோசகர் காமினி சரத் கொடகந்த ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்குறிப்பிட்ட நூலின் சிங்கள மொழிபெயர்ப்பானது பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் அஜித் பெரகும் ஜயசிங்க என்பவரால் செய்யப்பட்டது. உலகளாவிய கொள்கைசார் உரையாடல்களில் இலங்கையர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதும், இந்தியாவின் இராஜதந்திர நோக்குநிலைகள் குறித்த ஆழமான புரிதலை ஊக்குவிப்பதுமே இதன் பிரதான நோக்கங்களாகும்.

கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட ‘இந்திய வழி’ எனும் நூலானது 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி மற்றும் 2020 இல் ஏற்பட்ட கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் ஆகியவற்றினால் தூண்டுதலளிக்கப்பட்ட பூகோள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்கிறது. அதுமாத்திரமன்றி இத்தகைய நிலையற்றதும், போட்டித்தன்மை மிகுந்ததுமான உலகில் அசைக்கமுடியாத ஒரு பெரும் சக்தியாக இந்தியா எவ்வாறு எழுச்சியடைந்துவருகிறது என்பது பற்றியும் இந்நாள் அமைச்சரும், முன்னைய இராஜதந்திரியுமான ஜெய்சங்கர் இந்நூலில் நுணுக்கமாக விபரித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அந்நூலை சிங்களத்தில் மொழிபெயர்ந்து, விநியோகிப்பதற்கான உரிமத்தைப்பெற்ற பாத்பைன்டர் பவுன்டேஷன், அம்மொழிபெயர்ப்பு நூல் முக்கிய கல்வி நிலையங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.