முன்னேற்றங்களுக்கு மத்தியில் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்கின்றன!

26 0

நாட்டின் பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பினும் நலிவுற்ற நிலையும், நிச்சயமற்ற தன்மைகளும் நிலவுவதனால், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குவேண்டியது மிகவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் வலியுறுத்தியுள்ளார்.

வொஷிங்டனில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட மீளாய்வு கடந்த ஜுன் மாதம் 12 ஆம் திகதி பூர்த்திசெய்யப்பட்டது. அதனையடுத்து இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கு உதவக்கூடியவகையில் 336 மில்லியன் டொலர் நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டது. பொருளாதார நடத்தைக் குறிகாட்டிகள் வலுவானவையாகக் காணப்படுவதுடன் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி, பணவீக்க வீழ்ச்சி, உயர்வான கையிருப்பு, வருமான உட்பாய்ச்சல் அதிகரிப்பு என்பன உள்ளடங்கலாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலமான விளைவுகளும் நேர்மறையான விதத்தில் பதிவாகியிருக்கின்றன’ எனவும் ஜுலி கொஸாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாம் ஏற்கனவே கூறியிருந்ததைப்போன்று நலிவுற்ற நிலையும், நிச்சயமற்ற தன்மைகளும் தொடர்கின்றன. ஆகவே மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது மிக அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று இலங்கைக்கும் சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் கடந்த செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி எட்டப்பட்ட அடிப்படை இணக்கப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.