மறுசீரமைப்புக்களைத் தொடர்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு மகிழ்ச்சி – ஐ.எம்.எப்

38 0

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதனையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்திருக்கிறார். 

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 21ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒரு மாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சமகால பொருளாதார மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையில் நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவர் முதலான அதிகாரிகள் குழுவினர் கடந்த புதன்கிழமை (2) நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இச்சந்திப்புக்களின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், ‘இலங்கை பொருளாதாரம் முகங்கொடுத்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவினருடனும் செயற்றிறன்மிக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். இதன்போது 2022ஆம் ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்ததன் பின்னர், நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டோம்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை அதன் பொருளாதார மறுசீரமைப்பு இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான திகதியொன்றை நிர்ணயிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையின் பொருளாதாரக் குழுவும் இணைந்து முன்னெடுக்கும்’ எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.