இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை – ஜெய்சங்கர் !

10 0

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் பிற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போதே இந்தியவெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை இதன்போது இந்தியவெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்கும் என  அவர் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்தார்.

பல வருடங்களாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்தததுடன் இலங்கையின் விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக இந்தியாவின் ஆதரவின் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒரு நிலைமாற்றக் காலத்தை கடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் குறித்து வலியுறுத்திய பிற்பாடு கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பரந்த அனுபவத்திலிருந்து  இலங்கை பயனடையலாம் என தெரிவித்த பிரதமர்

விரயம் ஊழல் மற்றும் பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தியாளர்கள் கொள்வனவாளர்  மற்றும் விவசாய சமூகத்திற்கு மகத்தான அனுகூலங்களைக் கொண்டு வருவதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையுடன் டிஜிட்டல் தளம் தொடர்பான அறிவை  இந்தியா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்ததுடன் கதி சக்தி (நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை அரச ஊழியர்களுக்கு அபிவிருத்தித் திட்ட நடைமுறைப்படுத்தலை விரைவாகக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுங்கம் இறை வரி தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.இதன்போது வெவ்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.