எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட 50 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

32 0

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (04)  விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

அத்துடன், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 மீனவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 37 மீனவர்களும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விதித்து அவர்களை விடுவித்தது.

அத்துடன் 13 மீனவர்களுக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 4 மீனவர்களுக்கு தலா ஓர் ஆண்டும், இன்னொருவருக்கு ஒன்றரை ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.