சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ் தளம் செயல்பட்டு வருவதாகவும் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு மஸ்க் மறுப்பு தெரிவித்த நிலையில் பிரேசிலில் எக்ஸ் தளத்துக்குத் தடைவிதித்து நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் உத்தரவிட்டார். மேலும், இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த உத்தரவுப்படி தற்போது அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க் மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார். அதாவது, தவறான வங்கிக்கணக்குக்கு அந்த அபராத தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேசிலில் எக்ஸ் தளத்தின் மீதான தடையை நீக்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எக்ஸ் தளம் அபார பணத்தைத் தவறாக அனுப்பியதை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், மீண்டும் அந்த பணத்தை எக்ஸ் தளத்தின் கணக்கிற்குத் திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.