நாட்டில் நேற்று இடம்பெற்ற மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைவல திவுலபிட்டிய வீதியில் நைவல தோட்டம் பிரதேசத்தில் வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நைவல தோட்டம் வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு பிரதான வீதியின் மொலகொட பகுதியில் வீதியைக் கடந்த பாதசாரி மீது கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டியொன்று மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், கொட்டாஞ்சேனை மேபீல்ட் சந்தி பகுதியில் பொருட்களை ஏற்றுவதற்காக பின்னால் சென்ற லொறியொன்றிலும், குறித்த லொறிக்கு பின்னால் நின்றிருந்த மற்றுமொரு லொறியிற்கும் இடையில் சிக்குண்டு பொருட்களை ஏற்றுவதற்காக வந்திருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்