நைஜீரியா படகு விபத்தில்: 60 பேர் உயிரிழப்பு; 80 பேரை காணவில்லை – 160 பேர் உயிருடன் மீட்பு

28 0

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 60 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டும் உயிர் தப்பினர். இந்நிலையில் எஞ்சிய 80 பயணிகளை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்பு 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்கின்றன. படகுகளை முறையாக பராமரிக்காதது, அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுவதுஆகியவை பெரும்பாலும் படகு விபத்துகளுக்கு காரணங்களாக உள்ளன. இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான படகில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், 100 பேர் மட்டுமே அப்படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.