காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர் பகுதியில் கடைகள் அடைப்பு

23 0

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (அக்.4) பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப வேண்டும் என பாம்க சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் கடை அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி போராட்டத்தினை ஒட்டி தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர்,மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

கடத்தூர், பொம்மிடி, அரூர் ஆகிய ஊர்களில் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில நிர்வாகிகள் செந்தில், இமயவர்மன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தும் கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். இன்றைய போராட்டத்தை முன்னிட்டு அரூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.