இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமாரதிசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் விஜயம் என்பதால் இந்த விஜயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்தியாவின் அயல்நாடுகளி;ற்கு முன்னுரிமை மற்றும் சாகர் கொள்கைகளின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கரின் விஜயம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மீளாய்வு செய்வதுடன் கொழும்பின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் வகையில் அமைந்திருக்கும்.
இந்திய முதலீடுகள்,பிராந்திய பாதுகாப்பு,இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமாரதிசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்டறிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும்.
புதன் கிழமை இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இலங்கை பிராந்தியத்தில் அமைதியான ஸ்திரமான நாடாக மாறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
ஊழலிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தி;ற்கு உதவுவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்திற்கு உதவதயார் என அவர் தெரிவித்தார்.