மாத்தளை, மஹவெல, மடவல பிரதேசத்தில் மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறி கொலை செய்யப்பட்ட மாணவனின் பாடசாலைக்கு முன்பாக பிரதேசவாசிகள் நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவுடுபெலெல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவே பிரதேசவாசிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை (01) அன்று கொலை செய்யப்பட்ட மாணவன் தனது நண்பனின் 16 வயது காதலியைச் சந்திப்பதற்காக இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் மஹவெல, மடவல பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, நண்பனின் காதலியின் உறவினர்கள், மாணவனையும் மாணவனின் நண்பர்களையும் பலமாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மாணவனும் மாணவனின் நண்பர்களும் சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நண்பனின் காதலி மற்றும் காதலியின் தந்தை உட்பட ஏழு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறி பிரதேசவாசிகள் நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.