தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

60 0

இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03)  ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது.

அவர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவது தான் சரியானது. அதனை விடுத்து , தங்களில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைப்பது சரியானது அல்ல.

ஆகவே ஐக்கியத்தை விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒருமித்து போவதே சரியானது.

தம்மில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைத்துள்ளனர். அதிலும்  யாரை அழைக்கின்றார்கள் என குறிப்பிடவில்லை.

அதுமாத்திரமின்றி அவர்களுக்கு பொது சின்னமோ பொது கட்சியோ இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது கட்சியில் தமது சின்னத்தில் போட்டியிடுமாறு கோருகின்றனர். அது சரியானதல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு நாம் பல தடவைகள் கோரியும். அதனை செய்யவில்லை.

தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட விரும்பினால், அதனை எமக்கு அறிவிக்கலாம் என்றார்.