5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு

161 0
  • நம் நாட்டில் முன்பு 2000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தது. ஆனால், தற்போது புதிதாக 5000 பெண்களில் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. 
  • ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்று எண்ண வேண்டாம். 100 புற்றுநோயாளர்களில் ஒருவர் ஆண். அத்துடன் இளம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்றும் எண்ண வேண்டாம். 

இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாக  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இலங்கையில் வருடாந்தம் 5500 பெண்களும் 125 ஆண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இந்த மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கிலும் சர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டும் கொழும்பில் பாரிய விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை (02) இடம்பெற்றது.

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் ரஜித ரொட்ரிகோ 306 B1 மாவட்டம் மற்றும் ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ரவி சிவகுமார் சர்வதேச குலோபல் திட்ட ஒருங்கிணைப்பாளர் 306 B1 மாவட்டம் ஆகியோரின் ஏற்பாட்டில் கொழும்பு லங்கா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், Lions கழக உறுப்பினர்கள், Leo கழக உறுப்பினர்கள், Rotaract கழக உறுப்பினர்கள், புற்றுநோய் மருத்துவத்துறையை சார்ந்தவர்கள், பொலிஸார் ஆகியோர் இணைந்து இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.

 இந்த பேரணி கொழும்பு பொலிஸ் பார்க் ஊடாக சென்று, கொழும்பு ஹவலக் சிட்டி வணிக வளாகத்தை அடைந்தது.

இதனை தொடர்ந்து கொழும்பு ஹவலக் சிட்டி வணிக வளாகத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான செயலமர்வு இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் கொழும்பு லங்கா வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த வைத்தியர் காஞ்சனா விஜயசிங்க மார்பக புற்றுநோய் தொடர்பான பல தகவல்களை தெரிவித்தார்.  

வைத்தியர் காஞ்சனா விஜயசிங்க  மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய புற்றுநோய்களை விட மார்பக புற்றுநோய்க்கு மட்டும் ஏன் ஒரு மாதத்தை ஒதுக்கி உள்ளார்கள்?

இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளில் பிரதானமாக இந்த மார்பக புற்றுநோய் காணப்படுகிறது.

இந்த நோயை முன்கூட்டியே அறிந்துகொண்டால் மிக இலகுவாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால்தான் ஒரு மாதத்தையே ஒதுக்கி மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.

முன்பு நம் நாட்டில் 2000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தது. ஆனால், தற்போது புதிதாக 5000 பெண்களில் இந்த மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. 08 பெண்களில் ஒருவருக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் சிறியளவில் தென்படும்போதே வைத்தியரை நாடுங்கள். நாங்கள் இந்த அறிகுறிகள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அதனால் மார்பகங்களில் ஏதேனும் ஒரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள் என்றால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.

அதன்போது வைத்தியர், இது பிரச்சினைக்குரிய விடயமா, இல்லையா என்பதை தீர்மானிப்பார். பெரும்பாலும் உடற்பயிற்சி செய்தல், தாய்ப்பால் புகட்டுதல் போன்றவை மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவும்.

பெண்களிடம் நாங்கள் இதைப் பற்றி பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் வைத்தியரை நாட தயங்குவதற்கு காரணமாக கூறுவது, மார்பக புற்றுநோய் வந்ததும் மார்பகங்களை முற்றாக அகற்றிவிடுவார்கள் என்ற பயமே ஆகும்.

ஆனால், இந்த புகைப்படங்களை பாருங்கள். இதில் இருப்பவர் ஓர் இளம் பெண். அவரின் ஒரு பக்க மார்பகம் முற்றாக அகற்றப்பட்டு மீண்டும் சீராக்கப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? இன்று வைத்தியத்துறை இந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது.

அடுத்த பயம், கீமோதெரபி வழங்குவதால் முடி உதிர்ந்துவிடும் என்பதாகும். நாங்கள் கீமோ தெரபி வழங்குவது 06 மாதங்கள் மட்டுமே. அதன் பின்னர் 6-7 வருடங்கள் நீங்கள் நன்றாக வாழ்வீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்று நினைக்க வேண்டாம். 100 புற்றுநோயாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் ஒருவர் ஆணாகத்தான் இருப்பார். அத்துடன் இளம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்றும் எண்ண வேண்டாம் என்றார்.

அத்துடன் இந்த செயலமர்வில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணொருவர் மார்பக புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 

அவர் மேலும் கூறுகையில்,

முதலில் எனக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் மற்றும் உதவி செய்தவர்களுக்கு நன்றி . நான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  06 மாதங்கள் ஆகும் போது எனக்கு தலை மயிர்  கொட்டியது.

நான் மிகவும் பயந்தேன் . அந்த நேரம்  எனக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் பயப்படாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

மாதம் ஒரு முறை மாதவிடாயை எதிர்நோக்கும் பெண் எனில், முதல் 7-10 நாட்களில் உங்கள் மார்பகங்களில் நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காணப்படுகிறதா என பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

குளிக்கும்போது, உடை மாற்றும்போது, நீங்கள் பாதுகாப்பாக உணரும் அனைத்து சந்தர்ப்பங்களின்போதும் நீங்கள் இதனை அவதானித்துக்கொள்ளலாம். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நீங்கள் இந்த வித்தியாசத்தை உணரலாம் என்றார்.

மேலும், இந்த செயலமர்வில் மார்பக புற்றுநோய் தொடர்பில் முக்கியமான சில தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மார்பக புற்றுநோய் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்வருமாறு

மார்பக புற்றுநோய்க்கான பிரதான அறிகுறிகள்

1.        மார்பகத்தில் கட்டிகள் தோன்றுதல்

2.        மார்பகத்தில் வீக்கம் ஏற்படுதல்

3.        மார்பகத்தில் அரிப்பு ஏற்படுதல்

4.        மார்பகத்தில் இருந்து இரத்தம் கசிதல்

5.        மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படுதல்

6.        மார்பகத்தில் வலி ஏற்படுதல்

உங்கள் மார்பகத்தை கண்ணால் பார்க்கும்போது…  

1.        இரண்டு மார்பகங்களும் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றனவா என பாருங்கள்

2.        கட்டி அல்லது தழும்புகள் இருக்கின்றனவா என பாருங்கள்

3.        வீக்கம் இருக்கிறதா என பாருங்கள்

4.        சருமத்தில் குழி போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என பாருங்கள்

5.        மார்பக காம்புகளில் (Nipples) ஏதேனும் வித்தியாசம் உள்ளதா என பாருங்கள்

6.        சிவப்பு நிற தளும்பு இருக்கிறதா என பாருங்கள்

7.        தாய்ப்பால் புகட்டும் தாய் எனில் பால் சுரப்பதில் வித்தியாசங்கள், கடினத்தன்மைகள் இருக்கின்றனவா என பாருங்கள்

உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கீழ்வரும் வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்

1.சுவநாரி சேவை

2.சுவ திவி சேவை

3.புற்றுநோயை முன்கூட்டியே அறியும் சேவைகள்

4.பியயுரு வைத்திய சேவை

5.அறுவை சிகிச்சை நிலையங்கள்

குறிப்பு – மார்பக புற்றுநோய் தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வைத்தியரிடம் வரும் நோயாளிகளில் 90 சதவீதமானோர் இறுதிக் கட்டத்தில்தான் வருகிறார்கள். இந்த மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 5ஆம் நிலையில் இருக்கும் நோயாளர்கள் இறுதிக் கட்டத்தில் வைத்தியர்களை நாடும்போது, அந்த நோயை குணப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.

இதனை தெளிவூட்டுவதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆகையால், மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து வைத்தியர்களை நாடுவது சிறந்தது.

மாதம் ஒரு முறையேனும்  மார்பக புற்றுநோய் தொடர்பில் வைத்தியர்களிடம் ஆலோசனை பெறுவதும் பரிசோதனை செய்து பார்ப்பதும் சிறந்தது என இதன்போது அறிவுறுத்தப்பட்டது.