சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (03) வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.
சங்கனையில் புதிதாக ஒரு மதுபான சாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலை அமைக்கவுள்ள இடத்திற்கு அருகாமையில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மத ஸ்தலங்கள், குடிமனைகள் காணப்படுகின்றன.
எனவே அந்தப் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மதுசார விலைகளை குறைத்து எமது சமூகத்தை அழிக்க வேண்டாம், போதையற்ற வாழ்வே ஆரோக்கியத்துக்கான வழி, எமது சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவை தானா, முடவனாக விரும்பும் மானிடனே மதுவை கையில் எடுக்காதே, இளைய சமூகமே மதுவை உங்கள் கைகளில் எடுக்காதீர், சிறுவர்களையும் மகளிரையும் மதுவுக்கு அடிமைப்படுத்தாதே” என கோஷமிட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், சங்கானை பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், வலிகாமம் மேற்கு முச்சக்கர வண்டி சங்கத்தினர், அந்திரான் தோற்பயிற்சி உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.