சமூக – பொருளாதார அபிவிருத்தி மையத்தினால் பெருந்தோட்ட சமூகத்தின் உரிமைகள், சவால்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியீடு

35 0

நாடளாவிய ரீதியிலுள்ள உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நல்வாழ்வுக்காக செயல்படும் தொண்டு நிறுவனமன கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகப் பிரிவின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மையமானது ‘இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான உரிமை, பிரச்சினைகள், சவால்கள் மற்றும் எதிர்கால மார்க்கங்கள்’ மற்றும் ‘இலங்கையில் உள்ள பெருந்தோட்ட சமூகங்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளம்’ என்ற இரு தலைப்புக்களின் கீழ்  விரிவான ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

குறித்து ஆய்வு தொடர்பான ஆவண வெளியீட்டு நிகழ்வு ‘பெருந்தோட்ட சமூகத்தின் விடியலை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு 8 இல் உள்ள சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மையத்தில் இடம்பெற்றது.

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மையத்தின் தேசிய இயக்குனர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துறைராஜா மற்றும் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி பிரைன் உடைகுவே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நேற்றைய நிகழ்வில் தம்பபன்னி கிரீன் எட்ஜ் தனியார் தோட்டப்பிரிவின் ஆய்வு ஆலோசகர் கலாநிதி டபிள்யு.ஜி.சோமரத்ன விளக்கமளித்தார்.

அத்தோடு ஆய்வு விளக்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் பகுதியும் இடம்பெற்றது.

நிகழ்வில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில்லும், இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் நீதியரசர் எஸ்.துறைராஜா, இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி பிரைன் உடைகுவே மற்றும் கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி வலென்ஸ் மென்டிஸ் உள்ளிட்டோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு குறித்த ஆய்வு ஆவணத்தின் பிரதிகளும் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.