உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்தால் பல அரசியல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்படும்

28 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வதென்பது பெரிய விடயமல்ல. அதனை செய்வதற்கான ஆர்வம் இல்லாமையே இங்குள்ள பிரச்சினையாகும். தாக்குதலின் பின்புலத்தைத் தேடிக் கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்படும்.இதன் காரணமாகவே இந்த தாக்குதல் தொடர்பான உண்மைகள்  மூடி மறைக்கப்பட்டுள்ளதாகக் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவித்தார்.

எனவே இந்த நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். கட்சிக்குள் அழுக்குகளை வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல், வீதி அரச நிழல் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட புலனாய்வு நூல் வெளியீட்டு நிகழ்வின் செயலமர்வொன்று  செவ்வாய்க்கிழமை (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் விவகாரம் 5 வருடங்களாக ஏன் இழுத்தடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என சிலர் எம்மிடம் வினவுகின்றார்கள். நாட்டில் ஒரு அசம்பாவிதம் இடம் பெற்றால் அதனை காலப்போக்கில் மறந்து விட வேண்டும் எனும் கலாச்சாரமே உள்ளது.நாம் அவற்றை இயல்பாகவே மறப்பது கிடையாது.

உண்மையில் அவை மறக்கடிக்கப்படுகிறது.இந்த தாக்குதலின் பின்புலத்தில் உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை எடுத்தால் இந்த மறக்கடிக்கப்படும் கலாச்சாரத்திலிருந்து எம்மால் விடுபடமுடியும்.

இந்ததாக்குதலின் போது உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வில்லை.நாட்டில் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் தூரநோக்கு சிந்தனையிலேயே இதனை நாம் செய்கிறோம்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்றுள்ளது.டபிள்யூ.டி.லிவேரா முதல் தடவையாக இதனை குறிப்பிட்டிருந்தார்.இதனை நாம் நம்புகிறோம்.சட்டமா அதிபர் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களும் அவரிடமே இருந்தன.அரசியல் சதி என்ன என்பது தொடர்பில் அறிந்துகொள்வதே தற்போதுள்ள விடயமாகும்.அது தொடர்பில் ஆணைக்குழுக்கள் கண்டறிந்துள்ளன.

எனினும் முன்னாள் சட்டமா அதிபரும் தற்போதுள்ள சட்டமா அதிபர்களும் அதனை செய்வதில்லை. ஏனைய கொலைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வது கிடையாது. இந்த இடத்திலேயே நாம் சிக்கியுள்ளோம். சட்டமும் அதே இடைத்திலேயே சிக்கியுள்ளது.

இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறேன்.அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட் என்பவர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிகுண்டை வெடிக்கசெய்யாமல் சென்று விடுகிறார். அவர் அந்த ஹோட்டலில் இருக்கும் போது  அவருக்கு தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றது.

அதற்கு அவர் பதிலளித்தார்.அதனை சிசிரிவி காட்சிகளில் காண முடியும். அதன் பின்னரே அவர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறி சென்றார். அந்ததொலைபேசி அழைப்பை யார் மேற்கொண்டது என்பதை கண்டறிந்திருந்தால் இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியும். இதுவரை அதனை அவர்கள் செய்யவில்லை.

ஜமில் மரணிக்க முன்னர் உயிருடன் இருக்கும் போதே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஜமிலின் வீட்டுக்கு சென்றனர்.உண்மையில் அது எவ்வாறு இடம் பெற முடியும்.அவர் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினர் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஜமில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக ஏன் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது?உண்மையில் அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லையா? அல்லது தெரிந்துகொண்டு அதனை அவர்கள் மறைத்துள்ளார்களா? என்ற கேள்வி எமக்குள்ளது. ஜமில் உயிரிழப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர் என்பதே எமது நிலைப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி காலப்பகுதியில் திரிப்பொலி எனும் இராணுவப் படை இருந்தது.உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான பல கொலைச்சம்பவங்கள்  உள்ளன உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்  மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரும் பல்வேறு கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் இருந்தவர்களாலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனல் 4 விடயங்கள் தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமித்தார்.அந்தக்குழு அதன் அறிக்கைகள் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் அவை சட்டமா அதிபருக்கு சமர்பிக்கப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த அறிக்கை தற்போது காணாமல் போயுள்ளது. அந்த அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கபட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தன.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள எமக்கு இருந்த சந்தேகங்களை குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாம் கடிதமொன்றை அனுப்பினோம்.கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதமொன்றை அனுப்பினோம்.

சனல் 4 இல் அசாத் மௌலானா கூறிய விடயங்கள் மற்றும் குண்டு தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்னர் களனிகம பகுதியில் லொறியொன்றை பொலிஸார் முற்றுகையிட்ட போது அந்த லொறியை விடுவிக்குமாறு தேசபந்து தென்னக்கோன் கட்டளை பிறப்பித்தார்.

அந்த லொறி கட்டுநாயக்கவில் இருந்து பாணந்துறையில் உள்ள வீடொன்றுக்கு சென்றுகொண்டிருந்தது.அதாவது சஹ்ரானின் Safe House சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஏன் அந்த லொறியை சோதனை செய்ய இடமளிக்கவில்லை. அந்த லொறியில் வெடிபொருட்கள் இருந்திருக்கும் என நாம் நம்புகிறோம். அங்கும் விசாரணையை திசை திருப்பினார். இதனை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டிருந்தாலே இதன் பின்புலத்தை கண்டறிந்திருக்க முடியும்.

சஹ்ரானுக்கு தொடர்ந்தும் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார்.அவர் தொடர்பில் ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. உண்மையில் அதனை ரவி செனவிரத்னவே வெளிப்படுத்தினார். அன்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக இருந்தார்.இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ளார்.

அபுஹிந்த் யார் என்பது தொடர்பில் தாம் தேடி பார்த்ததாக அவர் அன்று சாட்சி வழங்கியிருந்தார்.விசாரணை நீதிபதி ஒருவர் கடதாசி ஒன்றில் பெயர் ஒன்றை எழுதி ரவி செனவிரத்னவுக்கு அனுப்பினார்.ரவி செனவிரத்ன அதனை வாசித்ததன் பின்னர் நீதிபதி அந்த நபரா இவர் என வினவினார்.அதற்கு அவர் ஆம் என கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளது.

ஆனால் அந்த கடதாசியில் எழுத்தப்பட்ட அந்த பெயர் அந்த அறிக்கையில் இல்லை.அபுஹிந் என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி.அவரை தேடி கண்டு பிடிப்பது பெரிய விடயமல்ல. அதனை தேடுவதற்கான ஆர்வம் இல்லாமையே இங்கு உள்ள பிரச்சினையாகும். அதனை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்படும். இல்லாவிட்டால் வீடு செல்ல வேண்டும். இதன்காரணமாகவே இந்த தாக்குதலின் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்புலத்தில் உள்ள உண்மையை கண்டறிந்தால் கொலை செய்து அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையும் ஊழல் மிக்க மோசடி அரசியல் கலாசாரத்தையும் முடிவுக்கொண்டு வர முடியும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துவது, எதிர்காலத்தில் எவர் குற்றம் செய்தாலும் நிச்சயம் ஒருநாள் தண்டிக்கப்படுவார் எனும் பயத்தை ஏற்படுத்த முடியும். எனவே இந்த நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.பொதுத் தேர்தலுக்கு முன்னர் உங்களுடைய கட்சிகளை தூய்மைப்படுத்துங்கள்.கட்சிக்குள் அழுக்குகளை வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது என்றார்.