தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன் விடுவிக்க வேண்டும்

46 0

ஜனாதிபதியின் காலத்தில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ். கிளை தலைவருமான கே.எம்.நிலாம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாங்கள் தெரிவானதையொட்டி நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் எமது மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து இன்று அரசியல் கைதிகளாக பல இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அவர்களின் விடுதலை வேண்டி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவுகள் போராடிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்த விடயமே இருந்தபோதிலும் அவர்களின்  பிள்ளைகள் அல்லது உடன்பிறப்புக்கள் நாளாந்த சீவியத்துக்காக வன்னிப் பகுதியில் வீதியோரங்களில் பழம் விற்றுப் பிழைக்கும் காட்சி எம்மை கண்கலங்க வைக்கின்றது. உதாரணமாக எடுத்துக்கொண்டால், கிளிநொச்சி அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் நிலையினை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனைவி இளம் வயதிலேயே உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து பொருளாதார சிக்கல் நிலைகளுக்கும் முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

சந்தோஷமாக கல்வியை தொடரவேண்டிய அப் பிள்ளைகளின் முகங்கள் பெரும் துன்பத்தை மனதில் சுமந்து வாழ்வதனால் சோகையிழந்த நிலையிலேயே இருக்கின்றன.

அக்குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்ததனால் இதனை எம்மால் வெளிப்படுத்த முடிகிறது. ஆனால், இதுபோன்று எத்தனையோ பிள்ளைகள் கல்வியை தொடரமுடியாத நிலையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலை இவ்வாறே முடிவற்று தொடருமானால் அவர் பிள்ளைகளின் நிலை எதிர்காலத்ததில் எவ்வாறு இருக்கும் என ஊகித்துக்கொள்ள முடியும்.

எமது தந்தை இன்றோ அல்லது நாளையோ வருவார் என்ற ஏக்கத்துடனேயே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த கனவு நிஜமாகும்போது அப்பிள்ளைகளின் முகம் எந்தளவுக்கு பிரகாசிக்கும் என்பதனையும் எம்மால் உணர முடியும். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் இடம்பெறவேண்டும்.

எனவே, பல்வேறு பாதிப்புக்களுக்கும் முகங்கொடுத்த எமது மக்கள் புதிய ஜனாதிபதி வருகையின் பின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு வருமானால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும் என்றுள்ளது.