இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபரை நாடு கடத்த ஐகோர்ட் தடை

41 0

இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து,எனது விசா காலத்தை நீ்ட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்திய குடியுரிமை பெற்றவரைவெளிநாட்டு நபர் திருமணம் செய்தால், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகால விசா நீட்டிப்பு வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பதை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும். அதுவரை மனுதாரரை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” என உத்தரவிட்டார்.