ஆம்பூர் மருத்துவர் ஆலீஸ் ஜி.பிராயர் காலமானார்: ஏழை, எளிய மக்களுக்கு 65 ஆண்டுகால மருத்துவ சேவை

32 0

ஏறத்தாழ 65 ஆண்டுகள் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய ஆம்பூரின் ‘அன்னை தெரேசா’ என அழைக்கப்படும் மருத்துவர் ஆலீஸ் ஜி.பிராயர்(86) உடல் நலக்குறைவால் வேலூரில்உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கெட்லெட் பிராயர். இவர் நாகர்கோயிலில் உள்ள தேவாலயத்தில் போதகராகப் பணியாற்ற கடந்த 1936-ம் ஆண்டு வந்தார். இவருக்கு இரட்டையர்களாகப் பிறந்த 2 மகள்கள், ஒரு மகன் இருந்த நிலையில் 1938-ம் ஆண்டு கடைசி மகளாக ஆலீஸ் ஜி.பிராயர் பிறந்தார்.நாகர்கோயிலில் குழந்தைப் பருவத்தை கடந்த ஆலீஸ் ஜி.பிராயர்கொடைக்கானலில் தொடக்கக் கல்வியை முடித்தார்.அதன்பிறகு கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வியை அமெரிக்காவில் முடித்து 1968-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெதஸ்டா மருத்துவமனையில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். அங்கு வந்த கிராம மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களுக்கான மருத்துவ சேவையைத் தொடங்கிய ஆலீஸ் ஜி.பிராயர், தனி ஒருவராக கிராமம், கிராமமாகச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கினார்.

‘ஆம்பூரின் அன்னை தெரேசா’ – கிராம மக்களின் அன்பைப் பெற்ற ஆலீஸ் ஜி.பிராயரை ‘ஆம்பூரின் அன்னை தெரேசா’ என மக்கள்அன்போடு அழைக்க தொடங்கினர். இதுமட்டுமின்றி திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சையை வழங்கிய ஆலீஸ் ஜி.பிராயரை ‘மிஸ்ஸியம்மா’ என்றும் மக்கள் அழைக்க தொடங்கினர்.இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் இவருக்கு பல விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளன.

‘‘தம் வாழ்வின் பெரும் பகுதியைஇந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் செலவழித்து, தன் சுயவாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் பிறருக்காகவே வாழ்நாள் முழுவதும் சேவை ஆற்றியவர் ஆலீஸ் ஜி.பிராயர். வளர்ப்புப் பிராணிகள் மீதும் பேரன்பு கொண்டிருந்தார்’’ என ஆம்பூர், வாணியம்பாடி மக்கள் புகழாரம் சூட்டி வந்தனர்.

இந்நிலையில், 86 வயதான அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 24-ம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அவரது உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது.

இதைக் கேள்விப்பட்டதும் ஆம்பூர் நகரம் சோகத்தில் மூழ்கியது. பல இடங்களில் போஸ்டர் ஒட்டியும்,ஆலீஸ் ஜி.பிராயர் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆலீஸ் ஜி.பிராயர் குடும்பத்தார் அமெரிக்காவில் வசிப்பதால் அவர்கள் வந்தவுடன், அக்.3-ம் தேதி பெதஸ்டா மருத்துவமனை வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே வாழ்ந்த மருத்துவர் ஆலீஸ் ஜி.பிராயர் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.