மழை, வெள்ள பேரிடர்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

24 0

மழை, வெள்ள பேரிடர்களை முழுமையாக எதிர்கொண்டு மக்களை காப்பாற்ற, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 3-வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுகாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பல்வேறு துறைகளின் செயலர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். முன்பெல்லாம் வடகிழக்கு பருவகாலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இப்போது, காலநிலை மாற்றத்தால், சில நாட்கள், சில மணிநேரங்களில் மொத்தமாக கொட்டி தீர்த்துவிடுகிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவகாலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டதால், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பின. அனைத்து அமைச்சர்கள், துறை அதிகாரிகள், அலுவலர்களும் களத்தில் இருந்ததால், உடனடியாக நிலைமையை சமாளித்தோம். அதேபோல, இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலைமைச் செயலர் கடந்த செப்டம்பர் 14, 21-ம் தேதிகளில், பருவமழை ஆயத்த பணிகள் குறித்த கூட்டம் நடத்தி, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வானிலை தகவல்கள் வழங்க செயலி: சரியான நேரத்தில், மக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பெய்யும்மழையின் அளவு அப்போதே தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க முடியும். அதற்காக, 1,400 தானியங்கி மழைமானிகள், 100 தானியங்கி வானிலை மையங்களை நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம். இந்த தகவல்களை மக்களுக்கு வழங்கTN-Alert என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் புயல், கனமழை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியாக வெள்ள அபாயஎச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேரவெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு முன்பேமக்களை நிவாரண மையங்களுக்குகளப் பணியாளர்கள் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், உணவு வழங்க வேண்டும். வெள்ளம் ஏற்பட்ட உடன், அரசு இயந்திரம் இயன்றவரை விரைவாக செயல்பட வேண்டும். ஓர் உயிரிழப்புகூட ஏற்பட கூடாது என்ற நோக்கத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும்.

பருவமழை தொடங்கும் முன்பே வெள்ள தடுப்பு பணிகளை முடிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்களும் முன்னதாகவே தங்கள் பணிகளை தொடங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், ஆயத்த பணிகளை ஆய்வு செய்யவேண்டும். வெள்ள தடுப்பு பணிகளுடன்,தூர்வாரும் பணி, பாலங்கள், சிறுபாலங்களில் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மையில், தேடல், மீட்பு, நிவாரண பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் முறையான செயல்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

வெள்ள காலங்களில் நீர்நிலைகளுக்கு மாணவர்கள், சிறுவர்கள் செல்லாமல் தடுக்க பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். பேரிடர்களின்போது தகவல்தொடர்பு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை இயன்றவரை தடையின்றி வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள 15 மண்டலங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.