உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி

8 0

உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் கையெழுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, ஜாமீனில் கடந்த 26-ம் தேதி வெளியே வந்த செந்தில் பாலாஜி, மறுநாள் வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறைஅலுவலகத்தில் கையெழுத்திட்டார். 29-ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்ற அவர், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று (திங்கள்) 2-வது நாளாக கையெழுத்திட்டார். வாக்குவாதத்துக்கு பிறகு அவரது வழக்கறிஞரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.

நீதிமன்றத்திலும் ஆஜர்: அமலாக்கத் துறை வழக்குவிசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார். அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு வாரன்ட் பிறப்பித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், விசாரணையை அக்.4-க்கு தள்ளிவைத்தார். வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்குமாறு செந்தில் பாலாஜி கோரிய மனு மீது அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.