எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா சூடுவெந்தபுலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றும் போது
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்களால் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே எரிவாயு சின்னத்திற்காக பணியாற்றிய பலர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு படையெடுத்து வந்திருக்கின்றனர்.
இதில் கடந்த காலங்களில் எந்தவித குற்றச்சாட்டுகளும் அற்றவர்களை உள்வாங்கி தொடர்ந்து பயணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். சில வேளைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விலகி இருப்பதன் காரணமாக அக்கட்சியுடன் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது. ஆனால் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது.
எமது உயர்பீடமானது புத்தளம் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மாணித்துள்ளது. மேலும் பள்ளிவாசல் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மத்துலமா ஆகியவை என்னுடன் கலந்துரையாடி உள்ளன. எமது கட்சியில் அலி சப்ரி ரஹிம், இசாட் ரஹ்மான் மற்றும் முசரப் ஆகியோர் நிச்சயமாக கட்சியின் வேட்பாளராக எமது அணியில் இருக்க மாட்டார்கள். கூட்டமைப்பு என்று வரும் போது யார் யார் அதில் அங்கம் வகிக்க போகின்றார்கள் என்பது பற்றி முடிவாகவில்லை. இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்ட பின் கட்சி அதனை தெளிவுபடுத்தும்.
மேலும் ஜனாதிபதி தேர்தலிலே நாம் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கியிருந்தோம். குறிப்பாக தமிழ் சிங்கள முஸ்லிம் ஆகிய எல்லா தலைமைகளையும் அரவணைத்துக் கொண்டும், மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கு இடையேயும் ஒற்றுமையை உருவாக்கி வீழ்ந்து கிடக்கின்ற பொருளாதாரத்தினை மீட்சி அடைவதற்கு ஒரு வேலைத்திட்டத்தினை சஜித் பிரேமதாசா வைத்திருந்தமையாலேயே நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம்.
இதேவேளை எங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அழைப்பு வந்த போதும் அவரிடம் நீங்கள் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றி பெற முடியாது எனவே நீங்கள் எங்களை அழைத்தமைக்கு நன்றி என தெரிவித்திருந்தோம்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலிலே ஜேவிபி வேறு கட்சிகளை இணைக்காமல் தனிக் கட்சியாக போட்டியிட்டனர். இந்நிலையில் சிறுபான்மை கட்சியான நாங்கள் அமைதியாக இருந்தோ அல்லது நடு நிலைமையாக இருந்தோ அவரின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கியிருக்கலாம் என ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், அதன் பின்னர் தேர்தல் வெற்றியின் பின்னரும் பலர் தெரிவித்தனர்.
ஒரு கட்சி தொண்டர்களையும், பொதுமக்களிற்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். எனவே மூவின மக்களும் இணைந்து செயற்படுகின்ற சிறுபான்மை கட்சி என்ற ரீதியில் அமைதி காக்க முடியாது.
இருவர் எம்மை அழைத்திருந்த போதும், அவர்களில் யாருடன் இணைவதன் மூலமாக எமது மக்களின் இருப்பை, அபிவிருத்தியை நாட்டின் நலனை, பொருளாதார நலனை ஆராய்ந்தே இவ்வாறான முடிவை எடுத்தோம். இதில் வெற்றி, தோல்வி என்ற அடிப்படையில் நாங்கள் ஆதரித்த வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார். வெற்றிபெற்ற வேட்பாளர் தனது பணியினை செய்கின்றார். குறிப்பாக தேர்தல் காலத்தில் நிறைய விடயங்களை கூறியிருந்தன் அடிப்படையில் செய்துவருவதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
எமது நாடு நல்ல நிலைமையிலே பயணிப்பதோடு வீழ்ந்து கிடக்கின்ற பொருளாதாரம் கட்டியெழுப்ப வேண்டும், இலஞ்சம் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் இவ்வாறான நல்ல நிலைமை உருவாகுவதுடன் மற்றையவர் இடத்தில் தங்கி வாழாதவாறு கௌரவமாக எல்லோரும் வாழ்வதற்கான நல்ல நிலைமை உருவாக வேண்டும். அதற்காகவும் நாட்டின் நலனுக்காகவும் எவ்வாறான ஒத்துழைப்பினையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
கடந்த வாரம் எமது உயர்பீட கூட்டத்தின் போது சில உறுப்பினர்கள் எங்களது மாவட்டங்களில் வேறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலிலே போட்டியிடாமல் எமது மயில் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக இவ்வாறு தனித்து போட்டியிடுவதன் ஊடக புத்தளத்தில் ஒரு உறுப்பினரும், அம்பாறையிலே ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதோடு இரண்டையும் சேர்த்து தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தையும் பெற முடியும் என்பதால் அதனை புறந்தள்ள வேண்டாம் என்று அவ் மாவட்டத்தினை சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் திருகோணமலை, வன்னி, கொழும்பு உட்பட ஏனைய பல மாவட்டங்களில் எமது கட்சி தேர்தலில் போட்டியிட உள்ளது. அவ்வாறு போட்டியிடுகின்ற போது சேர்ந்தோ அல்லது தனித்தோ பயணிப்பது என்ற இரு கருத்துக்கள் இருக்கின்றது.
அவரிடம் எமது நியாயமான வேண்டுகோள்களை சஜித் பிரேமதாசா ஏற்கின்ற பட்சத்தில் சில மாவட்டங்களில் சேர்த்து பயணிப்பது பற்றி சிந்திப்போம். அவ்வாறு ஏற்காத பட்சத்தில் நாடு முழுவதும் தனித்து போட்டியிட்டு அதிகளவு ஆசனங்களை பெறும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
கடந்த தேர்தலிலே நாங்கள் சேர்ந்து போட்டியிட்ட கட்சி பலமான நிலையில் உள்ளது. ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டிய 23 இலட்சம் வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு சென்றது. அ
தில் 75 வீதமான வாக்குகள் சஜித் பிரேமதாசாவிற்கு கிடைக்க வேண்டிய வாக்குகளாகும். அவ்வாறு கிடைக்கப்பெற்றிருந்தால் சிலவேளைகளில் அவர் வெற்றி பெற்றிருப்பார். அதை உணர்ந்த பல ஐக்கிய தேசியக்கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்திக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேவேளை சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெற்று ஆட்சியை பிடிக்க முடியுமா என்று பல தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே நாம் கூட்டமைப்பை விட்டு பிரிந்து சென்று அவர்களை பலவீனப்படுத்துவது சரியா அல்லது அவர்களுடன் இணைந்து நாங்களும் கடந்த தேர்தலிலே இணைந்தவர்கள் உம் அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வது சரியா என்பதை சிந்தித்து புத்திசாதுர்ஜமான முடிவினை கட்சி எடுக்கும் என தெரிவித்தார்.