சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு

37 0

அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம்,  போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது.

அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின.

மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ  (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன.

புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது.

இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70  வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது.

சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது.

அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது.

இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன.