ஒவ்வெரு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் என்ற தொனியில் சென்று கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கின்றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணையா விட்டால் மிக பாரதூரமான விளைவுகளை தமிழ் அரசியல் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து இன்று திங்கள்கிழமை (30) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் வாக்குகள் சிதறும் நிலை உருவானால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நாம் இதைப் பார்த்தோம்.
இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் என்ற தொனியில் சென்று கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கின்றார். தமிழ் மக்களிடையே பொதுவாக அவர்களால் பேசப்படும் கருத்து நாம் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது. இதனை தமிழ் தேசிய கட்சிகள் வெளிப்படை தன்மையுடன் கூறுவதில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் ஒன்றினைந்து கேட்ட வேட்பாளரை விட தனித்துவமாக போட்டியிட்ட அனுரகுமார அவர்களுக்கு சிங்கள மக்கள் அதிகமான வாக்குகளை கொடுத்திருந்தார்கள்.
இன்று எம்முள் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றினைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கும் நிலையில் போட்டியிடுபவர்கள் யார்?. மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி என்னவென்றால் அதே நபர்கள் தொடர்ந்து இருப்பது தானா. இன்று ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் ஊழல் சம்மந்தமான விடயங்கள், சாராய பேர்மிட் வழங்கப்பட்டதாகவும், வாகன பேர்மிட் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கு உரிய நபர்கள் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்பு கூற வேண்டும்.
சிங்கள தேசம் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றது. நான் கூட சிங்கள தேசிய அரசியல் ஊடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கலாம் என்று நம்பியவன். ஆனால் 10 ஆண்டுகளாக நான் கட்ட அனுபவம் என்னவென்றால் சிங்கள தேசம் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றது.
ஈழத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக வாழ தயாராக இருக்க வேண்டும் என்பதே சிங்கள தேசியத்தின் நிலைப்பாடாகும்.
இன்று காணி சீர்திருத்தம் என்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் காணி சீர்திருத்தம் எனும் பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டு வந்த வரலாறு எமக்கு தெரியும் அதை தொடர மாட்டோம் என்று அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்சி தெரிவித்தாலும் கூட அவர்கள் காணி சீர்திருத்த திட்டத்தை வைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை நாங்கள் உணர வேண்டும். என மேலும் தெரிவித்தார்.