வரலாற்றில் முதல் முறையாக இவ்வாண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் 6ஆம் இடத்தில் இருந்து ஒரே வருட அசுர வளர்ச்சி அடைந்து தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண சமூக ஆர்வலர்கள்,கல்விமான்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மேலும் மாணவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானுக்கும் விசேட நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு வருவது என்பது நடைமுறை சாத்தியம் ஆனால் 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை என்பது வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாண சபையின் புதிய சிறந்த கல்வி கொள்கையுமே காரணம் என அறியமுடிகிறது.
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் கல்வி அமைச்சர் இல்லாத சூழ்நிலையில் கல்வி அமைச்சராகவும் அவர் செயற்பட்டார். பல வருடங்களாக இருந்த கிழக்கு மாகாண கல்வி கொள்கைகளில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார்.
அமுல்படுத்தப்பட்ட புதிய கொள்கைக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டங்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள், நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் சரியானவை என்பது இந்த வருட பெறுபேறுகளில் தெரியும் என தெரிவித்ததோடு,அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கல்விக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேற முக்கிய காரணியாக திகழ்தது.
அரசியல் செல்வாக்கால் 10 வருடங்களுக்கு மேல் சில பாடசாலைகளில் பாடங்கள் இன்றி கூடுதலாக காணப்பட்ட ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறை இருந்த பாடசாலைகளுக்கு மாற்றியமை.போதுமானபாடங்கள் இன்றி இருந்த 480 மேலதிக ஆசிரியர்களை உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்ட பாடசாலைகளுக்கு மாற்றியமை,1100 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்குவதில் இருந்த பல சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் குறுகிய காலத்தில் சட்டரீதியாக அணுகி அனுமதி பெற்று 1100 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கியமை, ஒவ்வொரு வலயக்கல்வி பணிபகங்களையும் ஆய்வு செய்து வலய கல்வி பணிப்பாளர்களுக்கு தனிப்பட்ட இலக்கு வழங்கியமை,ஆளுநர் செந்தில் தொண்டமான் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடல் மேற்கொண்டதுடன்,பல பாடசாலைகளுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
80சவீதமான ஆசிரியர்களை சந்தித்துள்ளார்.பாடசாலை கல்வியை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் போர்ட் வழங்கியமை, அதிபர்களுடன் கலந்துரையாடி பல பாடசாலைகளில் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்தமை, ஆதிவாசிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் சார்ந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தமை போன்று, ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சேவைகள் கூட இந்த வரலாற்று சாதனைக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்களும்,கல்வி மான்களும் தெரிவித்ததுடன்,கல்வியை போன்று கிழக்கு மாகாணத்த்தில் கலாச்சார ரீதியாக பொங்கல் விழா, கிறிஸ்மஸ் கொண்டாட்டம், இஃப்தார் நிகழ்வு, வெசாக், உலக தமிழ் இலக்கிய மாநாடு என பல நிகழ்வுகளை நடத்தி கலாச்சார ரீதியாகவும் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்தமைக்கான மிக முக்கிய பங்கு முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானை தொடர்பு கொண்ட போது,
கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும், கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே பொருளாதாரம் வளரும் எனவும், கல்வி கொள்கையில் பல மாற்றத்தை கொண்டு வந்தேன். பல விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.விமர்சனங்களுக்கு அஞ்சினால் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை நான் நன்றாக அறிந்தவர்.என்னதான் நான் கொள்கைகளை நிலைநாட்டி, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் அதற்கான முழு பாராட்டுகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர், பெற்றோர்கள் என அனைவரையும் சேரும்.
அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் இன்று இந்த பெறுபேறுகள் பெற்றிருக்க முடியாது.அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு மாகாணம் முதலிடத்திற்கு வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் இதே கொள்கையுடன் பயணிக்கும் போது கிழக்கு மாகாணம் அடுத்த வருடம் முதல் முதலிடத்திற்கு வரும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.