முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளின் உடலில் சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் தாயை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கண்டி, நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளம் தாயொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தாயின் 5 வயதுடைய மகள் முன்பள்ளிக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் கோபமடைந்த தாய் , மகளின் உடலில் பல இடங்களில் பலமாக சூடுவைத்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தாய் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.