பாராளுமன்றத் தேர்தல் : தபால் மூல வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

27 0

பாராளுமன்ற தேர்தலின்போது அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் அனைத்து அஞ்சல் வாக்காளர்களினதும் அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இதற்காக செல்லுபடியான வாக்காளர் இடாப்பாக பயன்படுத்தப்படுவது 2024ஆம் ஆண்டின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2024 (1)CR இடாப்பாகும் (2024ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இடாப்பு) பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல் மூல வாக்கிற்கு விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இம்முறை தேர்தலுக்காக மீண்டும் தமது அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் கட்டாயமானது என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

அதன் பிரகாரம், தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்கள் அனைவருக்கும் இத்தால் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது என்றுள்ளது.