ரஷ்யா – உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயற்கை உடல் உறுப்புகளை வடிவமைத்த 2 இந்தியர்கள்

12 0

 ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த உக்ரைன் வாசிகளுக்கு செயற்கை உடல் உறுப்புக்களை வடிவமைத்துக் கொடுத்ததில் 2 இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

உக்ரைனின் லிவிவ் நகரில் ‘சூப்பர்ஹியூமன்ஸ் மையம்’ என்ற எலும்பியல் சிறப்பு மருத்துவமனை உள்ளது. போரினால் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்த போர் வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, உளவியல் ஆலோசனை வழங்கி, ‘ப்ராஸ்தெடிக்’ எனப்படும் செயற்கை உடல் உறுப்புக்களை பொருத்தி,அவர்களது வாழ்வை புனரமைக்கும் மருத்துவமனை இது. இந்த சூப்பர்ஹியூமன்ஸ் மையத்தில் இதுவரை 625 பேருக்கு 850செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையின் மகத்தான சேவையில் ஈதர் பயோமெடிக்கல் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பங்குள்ளது. டெல்லியைச் சேர்ந்த வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியில் படித்த த்ருவ் அகர்வால் மற்றும் ஃபேய்த் ஜிவாகான் ஆகிய இருவர் தொடங்கிய நிறுவனம்தான் ஈதர் பயோமெடிக்கல். ‘ஜீயஸ்’ என்று பெயரிடப்பட்ட 70 செயற்கை கைகளை சூப்பர்ஹியூமன்ஸ் மையத்துக்கு இவர்கள் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக த்ருவ் அகர்வால் மற்றும் ஃபேய்த் ஜிவாகான் கூறுகையில்: போரினால் உருக்குலைந்த உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கானோரின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 3டி பிரிண்டிங் முறையில் செயற்கை கைகளை வடிவமைத்துள்ளோம்.

கை இழந்தவர் உடலில்செயற்கை கையை பொருத்தும்போது தசை வழியாக சைகைகளை உள்வாங்கிச் செயலாற்றக்கூடிய ‘பையோனிக் ஆர்ம்ஸ்’ இது.பொதுவாக பையோனிக் கைவலுவிழந்து, எளிதில் முறிந்துவிடும். அதுவே நாங்கள் வடிவமைத்திருக்கும் ’ஜீயஸ்’ உலகிலேயே வலிமையானது. 35 கிலோ எடைவரை இறுகப்பற்றித் தூக்க முடியும். அன்றாடம் நாம் செய்யக்கூடிய எந்த வேலையை செய்தாலும் சேதம் அடையாது.

மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஆன்லைன் வழியாக தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும் ’ஜீயஸ்’-ஐ வடிவமைத்துள்ளோம். இதற்கென கிளவுட் தொழில்நுட்ப அடிப்படையில் மொபைல் செயலி உள்ளது. ஒருவேளை செயற்கை கையில் கோளாறு ஏற்பட்டால் இந்த செயலி மூலம் மருத்துவருக்கு தெரியப்படுத்தினால் அவர் இருந்த இடத்திலிருந்தே கண்காணித்து பழுது பார்த்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.