வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் – கே.இன்பராசா

32 0

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.