சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும் என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
இன்று சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்புபவர்களை பகிரங்கமாக அழைத்திருந்தோம். எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஆரோக்கியமான, வெளிப்படையான கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பிரகாரம் தேர்தல் அரசியல் கடந்து ஏனைய விடயங்களை கையாளும் நோக்கில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவானது ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை சார்ந்த விடயங்களை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்க வேண்டிய விடயங்களை ஆராய்ந்து முன்னோக்கி நகர்த்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபடும்.
இக்குழுவானது எவ்வித அரசியல் விவகாரங்களிலும் ஈடுபடாது. அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது இணைந்தோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கான தீர்மானம் எவையும் எடுக்கவில்லை.
எதிர்வரும் வாரங்களில், பொதுக் கட்டமைப்புடன் கலந்துரையாடி நாங்கள் தொடர்ந்து, இணைந்து எவ்வாறு பயணிக்கலாம் என்ற நிகழ்ச்சி நிரலை வகுக்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளோம்.
பொதுக்கட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணிக்கக்கூடியவர்களாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். ஆகவே சிவில் அமைப்பின் தனித்துவம் இல்லாமல் போய்விடும். இப்போது தேர்தல் அரசியலில் உடன்படிக்கை செய்திருப்பதால் அவர்களும் அரசியல் கட்சிகளாகவே சமூக நிலையில் நோக்கப்படும்.
நாங்கள் அவர்களோடு உரையாடத்தான் இருக்கின்றோம். எதிர்காலத்தில் அரசியலில் செயற்படுவார்களேயானால் அதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை.
எந்தவிதமான குழப்பங்களும் விரிசல்களும் எங்களுக்குள் இல்லை. அவர்கள் அரசியல் விவகாரங்களுக்காக தேர்தலுக்காக முன்னெடுக்கிறார்கள்.
கடந்த 10 வருடங்களாக இவ்விதமான கூட்டங்களை நடாத்திவந்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலேயே இதனை நாம் நடாத்தினோம். இது ஏட்டிக்குப் போட்டியாக தொடங்கப்படவில்லை. அவ்வாறான நோக்கமும் எமக்கில்லை. தேர்தல் அரசியலில் இந்த அமைப்பு எப்போதும் ஈடுபடாது என்றார்.