திருக்கோவிலில் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தவர் கைது

29 0

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த 54 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நேற்றிரவு விநாயகபுரம் 4ஆம் பிரிவிலுள்ள காயத்திரி கிராமம் பகுதியிலுள்ள இந்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது பாவிக்கக்கூடிய செட்கண் ரக துப்பாக்கியின்  5 ரவைகளையும் வெறுமையான 3 ரவைகள் உட்பட 8 ரவைகளை கைப்பற்றியதுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவர் காட்டுமிருகங்களை சட்டவிரோத உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.