நியாயமான காரணிகளுடன் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க அனுமதி கோர முடியும்!

25 0

தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படும் வாக்காளர்கள் பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிலோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127 (ஆ) பிரிவின் கீழ் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினையளிக்க முடியாது என்று நியாயமான   அச்சமடையும்   வாக்காளர்கள்,பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு அனுமதியளிக்குமாறு  கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும்.

எவரேனும் வாக்காளர் அவரது விண்ணப்பப்பத்திரங்களை 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் இராஜகிரிய சரண மாவத்தை என்ற முகவரியில் உள்ள  தேர்தல்கள் செயலகத்தக்கோ அல்லது தாம் வசிக்கும் மாவட்டத்தின்  மாவட்டத் தேர்தல்கள் அலுவகத்துக்கோ சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பப் பத்திரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். அந்த இடாப்புக்கள் அனைத்தும் மாவட்ட செயலகங்களிலும் , கச்சேரிகளிலும் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும் வைக்கப்படும். அத்தோடு 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பின் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை www.elections.gov.lk இணையத்தளத்தினூடாக பரீட்சிக்க முடியும்.

விண்ணபப் பத்திரத்தில் காணப்படும் தகவல்கள் சரியானவையென விண்ணப்பதார் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில் ,இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும், அத்துடன் www.elections.gov.lk   என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.