ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு காஷ்மீர் பற்றி குறிப்பிடுவதை முதல் முறையாக தவிர்த்தார் துருக்கி அதிபர்

106 0

கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஐ.நா. பொதுச் சபையில் பேசும் போது, ஜம்மு காஷ்மீர் பற்றி குறிப்பிட்டு வந்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், இந்தாண்டு காஷ்மீர் பற்றி பேசவில்லை.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ஐ.நா. பொதுச் சபையில் பேசும்போதெல்லாம் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசுவார். குறிப்பாக காஷ்மீரில் 370-வது பிரிவு சிறப்பு சட்டம் ரத்து குறித்து பேசுவார். ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசின் கொள்கையை விமர்சிப்பார். காஷ்மீரில் அமைதி, நிலைத்தன்மை திரும்ப சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பொதுச் சபையில் பேசிவந்தார்.

ஐ.நா. மீது புகார்: அவரது கருத்தை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடு என இந்தியா நிராகரித்து வந்தது. இந்நிலையில் எர்டோகன், ஐ.நா. பொதுச் சபையில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் காஷ்மீர் பற்றி ஒரு வாரத்தை கூட பேசவில்லை. அவர் இஸ்ரேல் – காசா விவகாரம் குறித்து பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். உலகின் மிகப் பெரிய சமாதியாக பாலஸ்தீனத்தை ஐ.நா. மாற்றிவிட்டது என அவர் விமர்சித்தார்.

காஷ்மீர் பற்றி எர்டோகன் பேசாமல் இருந்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு காரணமாக அவர் காஷ்மீர் பற்றி குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது இந்தியாவுடன் அவர் சுமுக உறவை ஏற்படுத்த விரும்பியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.