பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரச துறையினரும், நாட்டு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்!

26 0

பொதுத்தேர்தல் குறித்து சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடுவோம். ஜனாதிபதித் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதை போன்று பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கு அரச துறைகளினதும், நாட்டு மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 70 உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய மற்றும் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் விடயதானங்களுக்கு அமைய 9 ஆவது பாராளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ) கலைக்கப்பட்டது.

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும்.

அதற்கமைய 2024.11.14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்தவும், 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை 2024.11. 21 ஆம் திகதி வியாழக்கிழமை   நடத்துவதற்கும் தீர்மானித்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். ஜனாதிபதித் தேர்தலில் போது அரச சொத்துக்கள் பயன்பாடு தொடர்பில் வெளியிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நிருபங்கள் பொதுத்தேர்தலுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

பொதுத்தேர்தல் தொடர்பிலான சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளோம். 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்துக்கு அமைவாகவே பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் தேர்தல் செலவினங்கள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம்.

ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் நடத்தப்பட்டது. எவ்வித பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கிய   ஒத்துழைப்பை  பொதுத்தேர்தலுக்கும் வழங்குமாறு அரச துறைகளிடமும், நாட்டு மக்களிடமும் வலியுறுத்துகிறோம் என்றார்.