இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடோம்!

37 0

நெருங்கிய நட்புநாடு என்ற ரீதியில் இலங்கை ஸ்திரமடைவதையும், அபிவிருத்தியடைவதையும் பார்ப்பதற்கு சீனா விரும்புகிறது. அதன்படி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமல், அந்நாட்டின் விருப்பத்துக்கு மதிப்பளித்தல் எனும் கொள்கையின் பிரகாரம் இலங்கையின் ஸ்திரமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் முன்னேற்றகரமான வகிபாகத்தைக் கொண்டிருப்பதற்கு சீனா தயாராக இருக்கிறது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே லின் ஜியான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

‘இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கடந்த 21 ஆம் திகதி சுமுகமான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அத்தேர்தலின் ஊடாக இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எமது மனமுவந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம். எமது ஜனாதிபதி சி ஜின்பிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துச்செய்தியொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

சீனாவும், இலங்கையும் பாரம்பரிய நட்புறவு நாடுகள் என்பதுடன், மிகநெருங்கிய அயலகங்களுமாகும். அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்கொண்டுசெல்வதற்கும், எமது அபிவிருத்திசார் உத்திகளுக்கு இடையில் செயற்திறன்மிக்க தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், வலுவான ‘ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட’ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், பரஸ்பர ஒத்துழைப்பை அடிப்படையாகக்கொண்ட எமது இராஜதந்திரத் தொடர்புகளில் முன்னேற்றங்களை அடைவதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது புதிய நிர்வாகத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சீனக்கடன்களை மீளச்செலுத்தல் தொடர்பில் கொண்டிருக்கும் கடப்பாட்டுக்கு இலங்கை தொடர்ந்து மதிப்பளிக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், ‘இலங்கையின் நட்புநாடு என்ற ரீதியில் இலங்கை ஸ்திரமடைவதையும், அபிவிருத்தியடைவதையும் பார்ப்பதற்கு சீனா விரும்புகிறது.

அதன்படி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமல், அந்நாட்டின் விருப்பத்துக்கு மதிப்பளித்தல் எனும் கொள்கையின் பிரகாரம் இலங்கையின் ஸ்திரமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் முன்னேற்றகரமான வகிபாகத்தைக் கொண்டிருப்பதற்கு சீனா தயாராக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.