ராஜபக்ஷ ஆட்சியின் அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறலை அரசாங்கம் புதிய கோணத்தில் அணுகும் – மகள் அஹிம்சா

23 0

ஜனாதிபதித்தேர்தல் முடிவு எமக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது. எனது தந்தையின் படுகொலை உள்ளடங்கலாக இலங்கையின் சமகால மனித உரிமைகள் வரலாற்றில் பதிவான மீறல்களை புதிய அரசாங்கம் மாறுபட்ட புதியதொரு கோணத்தில் அணுகும் என நம்புகின்றோம் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் திங்கட்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அஹிம்சா விக்ரமதுங்க, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

உண்மையைச் சொன்னதற்காக நியாயமற்ற வகையில் எனது தந்தையின் உயிர் பறிக்கப்பட்டது. அதற்கு நீதிகோரி இன்று நாம் நம்பிக்கையுடனும் இடைவிடாத அர்ப்பணிப்புடனும் காத்திருக்கின்றோம். 15 வருடங்கள் கடந்த பின்னரும் அதனால் ஏற்பட்ட வலி இன்னமும் தொடர்கிறது. ஆனால் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதற்கான எனது போராட்டத்தில் நான் திடமாக இருக்கிறேன்.

ஜனாதிபதித்தேர்தல் முடிவு எமக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது. இலங்கையின் சமகால மனித உரிமைகள் வரலாற்றில் பதிவான மீறல்களை புதிய அரசாங்கம் மாறுபட்ட புதியதொரு கோணத்தில் அணுகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வா போன்ற திறமையும், துணிச்சலும் மிகுந்த புலனாய்வு அதிகாரிகளால் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்ட போதிலும், எனது தந்தையின் படுகொலை தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுமார் 15 வருடகாலமாக அதிகாரத்திலிருந்த அரசாங்கம் மறுத்துவிட்டது. இது ‘தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு’ எமது நாட்டில் தொடர்வதை நினைவுறுத்துகின்றது. இந்தப் போக்கு எமது குடும்பத்தை நாடு கடந்து நீதிகோரும் நிலைக்குத் தள்ளியது.

இருப்பினும் முதன்முறையாக இம்முறை தேர்தலின் முடிவு எதுவாக இருப்பினும், முன்னிலை வகித்த இரண்டு வேட்பாளர்களாலும் எமக்கான நீதி பெற்றுத்தரப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. தனது அரசாங்கத்தில் எமக்குரிய நீதி வழங்கப்படும் என தனிப்பட்ட ரீதியிலும், தொடர்ச்சியாகவும் வாக்குறுதியளித்திருந்த சஜித் பிரேமதாஸவுக்கு எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகூற விரும்புகிறேன். மிகக்கடினமாகவும், தொடர்ச்சியாகவும் தனது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த அவர், இலங்கையர்களுக்காக அதனைவிடக் கடினமாகப் போராடினார்.

அதேவேளை எனது குடும்பத்துக்கும், ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட மேலும் பல குடும்பங்களுக்குமான நீதியை வழங்குவதாக உறுதியளித்தவரும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எமது வாழ்த்துக்கள்.

அதேவேளை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். நீதிக்கான பாதை மிக நீண்டதாகவும், கடினமானதாகவும் இருந்தாலும், என்னுடைய தந்தைக்கான எனது போராட்டத்தைத் தொடர்வதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.