அநுர அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பார் – கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை

47 0

சமத்துவம், நீதி மற்றும் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களைப் பொறுத்தமட்டில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்களவிலான சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றார்கள். எனவே தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என கனேடிய தமிழர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கூறி கனேடிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எமது வாழ்த்துக்களைக் கூறுகின்றோம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவரது வெற்றி மிகமுக்கியமானது என்பதுடன், இது மக்கள் மாற்றத்தையும், மறுசீரமைப்பையும் விரும்புவதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினாலும், தேசிய மக்கள் சக்தியினாலும் நிலைமாற்றத்தை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களை நாம் அங்கீகரிக்கிறோம்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜனாதிபதி என்ற ரீதியில், அவரது அரசாங்கம் தமிழ்ச்சமூகத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளுக்குரிய தீர்வை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். சமத்துவம், நீதி மற்றும் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களைப் பொறுத்தமட்டில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்களவிலான சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றார்கள்.

எனவே தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நம்புகின்றோம். அபிவிருத்தி, பாதுகாப்புசார் கரிசனைகள், நிலையான சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கக்கூடியவகையில் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பனவும் இதில் உள்ளடங்கும்.

அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின்கீழ் ஊழல் மோசடிகள் அற்ற, அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை நோக்கி இலங்கை பயணிக்கும் என நாம் நம்புகின்றோம். நேர்மையானதும், அனைவரையும் உள்ளடக்கியதும், தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகல இலங்கையர்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவகையிலும் நாட்டை முன்கொண்டுசெல்வதற்கு வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்தவேண்டும் என நாம் கோருகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.