தமிழ் மக்களின் தேசியபிரச்சினை தீர்கப்படவேண்டும்

29 0

நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றால் தமிழ் மக்களின்  தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்களின் எண்ணக்கிடக்கை ஐனாதிபதிக்கும் வெளியுலகிற்கும் புரிந்துகொள்ளக்கூடியது என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்றால்  இந்த நாட்டில் இருக்கக் கூடிய தமிழ் மக்களுடைய ஒத்துழைப்பு ,புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு போன்றவை மிக மிக அவசியமானவை அவர்களுடைய ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் பாரிய யுத்தம் இடம்பெற்றுள்ளது இந்த யுத்தம் ஏன் நடைபெற்றது எதற்காக நடைபெற்றது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாகக் காணிகளைப் பறிமுதல் செய்தல் , காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை,வடக்கு கிழக்கில் இனம் பரம்பலை மாற்றக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான செயற்பாடுகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆகவே சமத்துவத்தை பேணக்கூடிய ,சகல இனங்களையும்  கலாச்சாரம், பண்பாடுகளைப் பேணக்கூடியவர்கள் என்ற வகையில் இவ்வாறான விடயங்கள் நடக்காத வகையில் கட்டுப்படுத்துவார்கள் என்பதை தமிழ்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே இளம் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.எனவே ஒட்டுமொத்த நாட்டின் நன்மை கருதி நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட மக்கள், இன அடக்குமுறைக்குள் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பக்கூடிய வகையில் இனமத பேதமின்றியே சமுகத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கேற்ப தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை நம்புகின்றோம்.

இதேவேளை தமிழ்பொதுவேட்பாளர் விடயத்தில் பல்வேறுபட்ட நெருக்கு வாரத்தின் மத்தியில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சாணக்கியன்  இது கோமாளித்தனமான வேலை இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை  இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம் எனக் கூறி எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டபோதிலும் இவர்கள் மட்டுமன்றி  மட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல நாட்களாக முகாமிட்டிருந்து தமக்கான பிரச்சாரங்கள், எமக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டாலும் கூட வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் இரண்டு இலட்சத்திற்கு மேலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளோம்.

இது எமக்கு பெரிய வெற்றியாக கருதுகிறோம் மக்கள் ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் நாங்கள் கூட்டாகச் செயற்படவேண்டும் என்பதையும் இதனுள் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

சுமந்திரன் தேர்தலுக்குப் பிற்பாடும் இது விசமத்தனமான விடயத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறிய அவரது முட்டாள்தனமான கூற்றுத் தமிழ் மக்கள் திரண்டு வந்து பொதுவேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்தாலும் மக்கள் தெளிவாக தமது வாக்குகளை அளித்து கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளார்கள் என்பது  உண்மை ஆகவே நாங்கள் எடுத்துள்ள முயற்சி என்பது  தற்போது வந்துள்ள ஐனாதிபதி தொடக்கம்  இராஜதந்திரிகள் மட்டத்திலும் கூட  கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

என்பது மட்டுமல்லாமல் சில இடங்களில் முதலாவதாக ,சில இடங்களில் இரண்டாவதாக ,மூன்றாவதாக வந்திருக்கிறார் ஆகவே தொகுதி ரீதியாக பார்க்கும் போது அவர் வெற்றி பெற்றிருக்கிறார் ஒட்டுமொத்த இலங்கையின் தேர்தலில் கூட நாங்கள் வென்றிருக்கிறோம் என்பதைக் காத்திரமாக வெளியுலகிற்குச் சொல்லக்கூடியதாகும்.

இது சாதாரண விடயமல்ல நாங்கள் எடுத்த முடிவின் காரணமாகத் தமிழ் மக்களின் எண்ணக்கிடக்கையைச் செல்லியிருக்கிறது . ஆகவே இதற்காக உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.