மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து புதிய அரசாங்கத்துடன் வெகுவிரைவில் பேசுவோம்

23 0

மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன.

அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் ஊடாகத் தெரிவாகும் புதிய அரசாங்கத்துடன் நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருக்கும் பின்னணியில், ‘கடந்த 2022 ஆம் ஆண்டு முகங்கொடுக்கநேர்ந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு உதவிய, மிகக்கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்லும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்’ என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ‘இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு  வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நிதியச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நாம் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்’ என்ற அறிவித்துள்ளார்.