விஜித ஹேரத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

25 0

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிரான இலஞ்ச  வழக்கின் முக்கிய சாட்சியாளரான  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரும் முறைப்பாட்டாளருமான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரான விஜித ஹேரத் இன்று அமைச்சரவை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அதனால் அவருக்கு சாட்சியளிக்க வேறொரு திகதியை வழங்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி சாட்சியளிக்க மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.