ஆசிய தொடர் ஓட்டத்தில் தங்கம், வெள்ளி வென்றவர்களுக்கு பணப்பரிசு

33 0

தாய்லாந்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்த மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர்) நிறுவனத்தினால் 24 இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்ப்பட்டது.

ஸ்ரீலங்கா மெய்வல்லுநர் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாலித்த பெர்னாண்டோ பணப்பரிசை உரிய மெய்வல்லுநர்களுக்கு வழங்கினார்.

இந்த வைபவம் ஸ்ரீலங்கா மெய்வல்லுநர் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (24) காலை நடைபெற்றது.

அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கதையும் கலப்பினத்தவர்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கை வென்றெடுத்தது.

ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 04.48 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

தங்கம் வென்ற இலங்கை தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, பசிந்து லக்ஷான் கொடிகார, தினூக்க தேஷான், காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.

கலப்பினத்தவர்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 17.00 செக்கன்களில் இலங்கை அணியினர் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின்   கலப்பின   தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, சயுரி மெண்டிஸ், பசிந்து கொடிகார, நடீஷா ராமநாயக்க ஆகியோர் இடம்பெற்றனர்.

நடீஷா ராமநாயக்க, பசிந்து கொடிகார ஆகிய இருவரும் பணப்பரிசு வழங்கல் வைபவத்திற்கு பிரசன்னமாகி இருக்கவில்லை.