பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: காசாவில் அமைதி திரும்ப முழு ஆதரவு அளிப்பதாக உறுதி

25 0

நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடிசந்தித்தார். காசாவில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார்.அங்கு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடைபெறும் போரால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மோடிஆழ்ந்த கவலை தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

காசாவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்ப வேண்டும். ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில்உள்ள பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி பேச்சுமூலம் தீர்வு காணப்பட வேண்டும். இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகள் கொள்கையே நிரந்தர தீர்வாக அமையும். ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பாலஸ்தீனத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். இவ்வாறு மோடி கூறினார். போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவி வழங்கி வருகிறது. கடந்த அக்டோபரில் 32 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நேபாள பிரதமருடன் பேச்சு: நியூயார்க்கில் நேபாள பிரதமர் சர்மா ஒளியையும் பிரதமர் மோடிசந்தித்தார். அப்போது, நீர்மின் சக்தி,எரிசக்தி, டிஜிட்டல் துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் இணைந்துசெயல்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். குவைத் இளவரசர் ஷேக் சபாகாலேத்தையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, எரிசக்தி,உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதாக இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர். குவைத்தில் வாழும் இந்தியர்கள் நலனில் அந்த நாட்டுஅரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பல்வேறு துறைகளில் குவைத்துக்கு உதவி செய்து வரும் இந்தியாவுக்கு இளவரசர் ஷேக் சபா காலேத் நன்றி தெரிவித்தார்.