பாராளுமன்றத் தேர்தலிலும் சஜித்துடன் இணைந்தே பயணிப்போம்

25 0

பாராளுமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்தே பயணிப்போம். மலைய மக்களின் பிரதிநிதிகளாக எந்தவொரு கட்சி மாறுவதற்கான முடிவுகளை எடுக்கப் போவதில்லை. 

சாதாரண பிரஜையாக இருந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளை, அவர் மலையக மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையகப் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் வேறு கட்சிக்கு சென்று தேர்தலில் போட்டியிடுவது பொறுத்தமற்றது.

மலைய மக்களின் பிரதிநிதிகளாக நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான முடிவுகளை எடுக்கப் போவதில்லை. எனவே சஜித்துடன் நின்றி பொதுத் தேர்தலை இதே போன்று பலத்துடன் எதிர்கொள்வோம்.

எவ்வாறிருப்பினும் அருதி பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணையைப் பெற்று சாதாரண பிரஜையாக இருந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மலைய மக்கள் முன்னணி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்காலத்தில் இன, மத, மொழி வேறுபாடின்றி நாட்டின் சகல பிரஜைகளையும் சமமாக மதித்து அவர் செயற்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மிகவும் பின்தங்கியிருக்கின்ற மலையக பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதற்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைத்துள்ள பொறுப்பானது மிகவும் அத்தியாவசியமானது என்றார்