தேர்தலுக்குப் பின் இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லை – பெப்ரல்

8 0

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் (பெப்ரல்) நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வராலாற்றில் இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தல் இடம்பெற்ற பின்னர் பல்வேறு சட்ட மீறல்கள், வன்முறைகள் தொடர்பில்  கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகி இருக்கிறன்ற போதும் இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இதுவரை எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை.

அதனால் தேர்தலுக்கு பின்னரான இந்த காலப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒட்டுமொத்த தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் பயமுறுத்தல், அச்சுறுத்தல்கள் என  எமது பெப்ரல் நிறுவனத்துக்கு 1800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் அரச அதிகாரம், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்  மற்றும் சமூக வலைத்தலங்கள் ஊடாக இடம்பெற்ற சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவானது, தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்து தேர்தல் தினத்தன்று வரைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடம் காணப்பட்டாலும், தேர்தல் செயன்முறை முழுவதும் சட்டம் ஒழுங்கை வினைத்திறனாகப் பேணுவதற்கும், பக்கச்சார்பற்ற வகையில் செயலாற்றுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஏற்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலை ஒழுங்குபடுத்தல், தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைக் குறைத்தல், வன்முறைகளைக் குறைத்தல் மற்றும் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாத்தமைக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் பெப்ரல் அமைப்பு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அமைதியான தேர்தலை நடத்துவதற்கு, குறிப்பாக ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்புக் கொண்டு ஒத்துழைப்பு நல்கிய பிரஜைகளுக்கு  எமது நன்றிகளை தெவித்துக்கொள்கிறோம் என்றார்.